MEDIA STATEMENTNATIONAL

இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி முதியவர் வெ.700,000 இழந்தார்

ஈப்போ, அக் 8- இல்லாத கிரிப்டோ கரன்சி முதலீட்டுத் திட்டத்தை நம்பி தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 717,050 வெள்ளியை இழந்தார்.

போலி முதலீட்டுத திட்ட மோசடிக்கு தாம் பலியானது தொடர்பில் ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரியான 67 வயதுடைய அந்த நபர் போலீசில் புகார் செய்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை தளமாக கொண்டதாக கூறப்படும் யோமெக்ஸ் கிரிப்டோ மார்க்கெட் லிமிடட் எனும் நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை அந்த முதியவர் கடந்த மே மாதம் 22ஆம் தேதி பேஸ்புக்கில் கண்டதாக  அவர் சொன்னார்.

அந்த முதியவர் உடனே அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த முதலீட்டு நோக்கத்திற்காக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி அந்நிறுவனத் தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த முதலீட்டைத் தொடர்வதற்கு ஏதுவாக இ-வாலட் செயலியை செயல்பாட்டில் வைப்பதற்கு தொடக்கக் கட்டமாக 8,000 வெள்ளியை அவர் அனுப்பியுள்ளார். இந்த முதலீட்டின் வருமானமாக தனது இ-.வாலட்டில் 14,985 அமெரிக்க டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளதை  கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த நபர், 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 17 முறை பண பரிவர்த்தனையை செய்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தனது இ-வாலட்டில் 15 லட்சம் அமெரிக்க வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் அத்தொகையை மீட்க முடியாதததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பண பரிமாற்ற வரியாக மேலும் 300,000 வெள்ளியை செலுத்தும்படி அந்த முதலீட்டு நிறுவனத்  தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனினும் அவர் அப்பணத்தைச் செலுத்தவில்லை.

அதன் பிறகு தனது இ-வாலட்டில் இருந்த பணம் முழுமையாக காலியானதோடு அந்த செயலியிலும் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. பேங்க் நெகாரா இந்த முதலீட்டை முடக்கி விட்டதாக அந்நிறுவனம் காரணம் கூறியது என்று முகமது யூஸ்ரி தெரிவித்தார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாக அவர் மேலும் சொன்னார்


Pengarang :