MEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமை அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பு- மந்திரி  புசார் கூறுகிறார்

ஷா ஆலம், அக் 8- ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்று வருவதை பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல்  வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஆடாம் பெற்ற வெற்றி புலப்படுத்துகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டை மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் ஏற்ற சிறந்த அமைப்பாக ஒற்றுமை அரசாங்கம் விளங்குகிறது என்பதை மக்கள் அங்கீகரித்துள்ளதை இந்த வெற்றியின் மூலம் உணர முடிகிறது என்று பகாங் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசின் வேட்பாளரான டத்தோ அமிஸாருக்கு மக்கள் அபரிமித ஆதரவை அளித்து அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று நேற்றைய தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களாக தேர்தல் பிரசாரம் சீராக நடைபெறுவதற்கு பெரிதும் துணை புரிந்த காவல் துறையினருக்கும் ஒற்றுமை அரசின் வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தேர்தல் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பெலாங்கை தொகுதி உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில்பெந்தோங் அம்னோ தொகுதி செயல்குழுத் தலைவரான அமிஸாருக்கு 7,324 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமாட் 4,375 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் ஹாஸ்லிலெல்மி ஜூஹாஸ்னி 47 வாக்குகளையும் பெற்றனர்.

 


Pengarang :