ANTARABANGSA

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு பெற்றது- மலேசியா 32 பதக்கங்களை வாகை சூடியது

ஹாங்ஸோவ், அக் 9- கடந்த இரு வாரங்களாக இங்கு நடைபெற்று வந்த
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று முடிவுக்கு வந்தது.
நேற்றிரவு மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழாவில்
இப்போட்டியில் பங்கேற்ற 45 நாடுகளைச் சேர்ந்த 12,000
விளையாட்டாளர்களுக்கு சீனா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

சுமார் 75 நிமிடங்களுக்கு நீடித்த இந்த நிறைவு விழாவில் பதக்கத்தைக்
கைப்பற்றுவதில் விளையாட்டாளர்கள் காட்டிய முனைப்பு மற்றும்
தியாகத்தையும் இந்த போட்டியின் வெற்றிக்கு பாடுபட்ட
தன்னார்வலர்களின் பங்களிப்பையும் போற்றும் விதமாக பல்வேறு
அங்கங்கள் இடம் பெற்றன.

சீனாவின் புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் 2,100 விளையாட்டாளர்களின்
அற்புதப் படைப்பு இந்த போட்டியின் நிறைவு விழாவுக்கு முத்தாய்ப்பாக
அமைந்தது. இந்த ஆசிய விளையாட்டரங்கம் முதன் முறையாக
வானமாக, நட்சத்திரங்களாக, மலர்களாக, அலைகளாக மாறி காண்போரை
வண்ணக் கடலில் மூழ்க்கடித்தது.

இந்த பிரமாண்ட திறப்பு விழாவுக்குப் பின்னர் நடைபெற்ற
விளையாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அணிவகுப்பை
அரங்கில் கூடியிருந்த சுமார் 80,000 பார்வையாளர்கள் விண்ணைப்
பிளக்கும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.

இந்த நிறைவு விழா அணிவகுப்பில் மலேசிய கொடியை ஏந்தி அரங்கில்
அணிவகுத்து வரும் வாய்ப்பு 80 கிலோகிராமுக்கு கீழ்ப்பட்ட குமித்தே
பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முகமது அரிப் அஃபிபுடின் அப்துல்
மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.

இந்த அணிவகுப்பில் கராத்தே, கபடி, ஜூ ஜிட்சு போட்டிகளின்
பங்கேற்பாளர்கள் மற்றும் விளையாட்டு செயலக உறுப்பினர்கள் உள்பட 40
பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஆசியப் போட்டியில் 40 விளையாட்டுகள் இடம் பெற்ற வேளையில்
அதில் 22 விளையாட்டுகளில் மலேசியாவின் 288 விளையாட்டாளர்கள்
பங்கு கொண்டனர். அவர்கள் மூலம் 6 தங்கம் 8 வெள்ளி மற்றும் 18
வெண்கலம் உள்பட மொத்தம் 32 பதக்கங்களைப் மலேசியா பெற்றது. இந்த
போட்டியில் மலேசியா நிர்ணயித்திருந்த 27 பதக்க இலக்கை விட அது
அதிகமாகும்.


Pengarang :