ANTARABANGSA

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி – ஓ.ஐ.சி. கண்டனம்

ஜெட்டா, அக் 9- நூற்றுக்கணக்கானோர் பலியாகவும் ஆயிரக்கணக்கானோர்
காயமடையவும் காரணமான காஸா தீபகற்பம் மீதான இஸ்ரேலின்
தாக்குதலை ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம்
கடுமையாகச் சாடியுள்ளது.

அந்த பிராந்தியத்தில் பதட்ட நிலை ஏற்படுவதற்கு இஸ்ரேலே காரணம்
எனக் கூறிய அந்த அமைப்பு, அந்த யூத நாட்டின் குடியேற்ற
நடவடிக்கைகளே அங்கு நிலைத்தன்மை சீர்குலைந்ததற்கு காரணம் எனக்
குற்றஞ்சாட்டியது.

ஆகக்கடைசி கள நிலவரங்களும் பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல்
மேற்காண்டு வரும் குடியேற்ற நடவடிக்கைகளும் மிகுந்த கவலையை
அளிப்பதாக உள்ளது என்று ஓ.ஐ.சி. தலைமைச் செயலகம் தெரிவித்தது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான குடியேற்ற நடவடிக்கை, அனைத்துலக
தீர்மானங்களை பின்பற்றாதது, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தினசரி
மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவர்களின் நிலம் மற்றும் உரிமையை
பறிக்கும் நடவடிக்கை ஆகியவை அங்கு நிலைத்தன்மை இல்லாது
போனதற்கு காரணமாக விளங்குகிறது என்று அந்த அமைப்பு இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாலஸ்தீன மக்களுக்கு
அனைத்துலக நிலையில் பாதுகாப்பு அளிக்கும்படி அனைத்துலகச்
சமூகத்தை குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தை ஓ.ஐ.சி.
கேட்டுக்கொண்டது.

இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கூடிய
நம்பகத்தன்மைமிக்க அரசியல் நடவடிக்கைகளை பாதுகாப்பு மன்றம்
முன்னெடுக்க வேண்டும் என்பதோடு சுதந்திரமும் இறையாண்மையும்
கொண்ட பாலஸ்தீன நாட்டின் உருவாக்கத்திற்கும் துணை நிற்க வேண்டும்
என அது வலியுறுத்தியது.

நேற்று முன்தினம் தொடங்கி இரு தினங்களாக காஸா தீபகற்பம் மீது
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 413 பேர்
கொல்லப்பட்டதோடு 2,300க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக பாலஸ்தீன
சுகாதார அமைச்சு கூறியது.


Pengarang :