தாய்மொழிப் பள்ளிகளின் நிலை மேல் முறையீடு  நீதிமன்றம்  -நவம்பர் 23 தில்   தீர்ப்பு வழங்கும்

புத்ராஜெயா, அக் 11 –    கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ்  தாய்மொழிப் பள்ளிகளுக்கு அந்தஸ்து இல்லையென்பதால் அதன் செயல்பாடு சட்டவிரோதமானது என பிரகடனம் செய்யும்படி  நான்கு  மலாய்-முஸ்லிம்  தரப்பினர் செய்திருக்கும்  மேல்முறையீட்டைத் தொடர்ந்து, தாய்மொழிப் பள்ளிகளின் நிலை குறித்து நவம்பர் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என  மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த  ஜூலை 5, ஆகஸ்டு 24 மற்றும் நேற்று நடைபெற்ற மூன்று அமர்வுகளில் வழக்கறிஞர் அளித்த எழுத்துப் பூர்வமான  மற்றும் வாய்மொழி  வாதத் தொகுப்புகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதால் அதனை   தாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்ற   நீதிபதி சுபாங் லியான் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கு   பொது நலன் சம்பந்தப்பட்டதாக   இருப்பதாக நீதிபதிகள்  எம் குணாளன் மற்றும் அஜிசுல் அஸ்மி அட்னான் ஆகியோருடன் வழக்கை செவிமடுத்த சுபாங் லியான்   தெரிவித்தார்.

முன்னதாக மாப்பிம்  எனப்படும்  இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு  மன்றம்  மற்றும் மலேசிய   எழுத்தாளர்கள் சங்கங்களின்  சம்மேளனமான காபேனா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹனிப் கத்தாரி அப்துல்லா  தமிழ் அல்லது மாண்டரின் மொழியை கற்பிக்கும் மொழியாக தாய்மொழிப் பள்ளிகளை பயன்படுத்துவதற்கு   அரசியலமைப்பு சட்டம்   அனுமதிக்கவில்லை என்று வாதிட்டார்.

இதற்கு முன்னதாக உயர் நீதிமன்ற  நீதிபதி  நஸ்லான் கசாலி    தாய்மொழிப் பள்ளிகளில்  பஹாசா மிலாயுவைத் தவிர மற்ற மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஊடகமாகப் பயன்படுத்துவதை அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியிருந்தது.   சுதந்திரத்திற்கு  முன்பிருந்தே, கல்வி முறையின் சட்டமியற்றும் கட்டமைப்பிற்குள் தாய்மொழிப் பள்ளிகள்  அங்கீகரிக்கப் பட்டுள்தோடு தாய்மொழிப் பள்ளிகளை  அரசியலமைப்புச் சட்டம் நீண்ட காலமாக அங்கீகரித்துள்ளது என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில்  தெரிவித்திருந்தார்.

கடந்த  ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி  தாய்மொழிப்  பள்ளிகளுக்கு எதிராக கோத்தா பாரு நீதிமன்றத்தில்  ஐ-குரு  அமைப்பு செய்திருந்த   வழக்கை நீதிபதி  அபாஸாஃப்ரி தள்ளுபடி செய்தார்.


Pengarang :