ECONOMYNATIONALSELANGOR

தொழிற்சாலை கழிவுகளால் நீர்த் தேக்கக் குளத்து மீன்கள் மடிந்தன

ஷா ஆலம், அக். 11–  தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக புஞ்சா ஆலமில் உள்ள ஆலம் ஜெயா தொழில் பூங்கா நீர் தேக்கக் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள்  மடிந்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின்  சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெஃப்ரி அப்துல் மனாப், அக்குளத்து நீர் கருப்பு நிறமாக மாறி கடுமையான துர்நாற்றமும் வீசியதோடு ஈக்களும் மொய்த்தன என்று சொன்னார்.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் கூட்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து உறைந்த கடல் உணவுகளை பதப்படுத்தும் மற்றும் காலாவதியான கடல் உணவுகளை அகற்றும் அந்த தொழிற்சாலைக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

நேற்று காலை 10.30 மணியளவில்  கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு தவறிழைத்த அந்த தொழிற்சாலையை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்

இந்த தொழிற்சாலையை உடனடியாக மூடுவதற்கு இரண்டு சம்மன்கள் மற்றும் நான்கு குற்ற அறிக்கைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்  என்று  அவர் மாசுபட்ட நீர்த்தேக்க குளம் மற்றும் தொழிற்சாலைக்கு திடீர் வருகை மேற்கொண்ட போது கூறினார்.

நேற்று நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அந்த  தொழிற்சாலை தூய்மைக்கேட்டிற்கு  மூலக் காரணம் என  அடையாளம் காணப்பட்டதாக ஜெஃப்ரி கூறினார்.

காலாவதியான கடல் உணவை அரைத்து, பின்னர் பொது வடிகால்களில் அப்புறப்படுத்தியதை   தொழிற்சாலை நிர்வாகம்  ஒப்புக்கொண்டது. பின்னர் அந்தக் கழிவு   சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர் தேக்கக் குளத்தில் பாய்ந்தது என்று அவர் சொன்னார்


Pengarang :