ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கடும் மழை பெய்தால் 12 மணி நேரத்தில் வெள்ள அபாயத்தில் நான்கு மாநிலங்கள்

கோலாலம்பூர், அக் 13- இடியுடன் கூடிய அடைமழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் கெடா, சிலாங்கூர், சபா மற்றும் சரவாவில் உள்ள பல மாவட்டங்களில் 12 மணி நேரத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை, தென்கிழக்காசியா-ஓசானியா திடீர் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் வடிகால் நீர் பாசனத் துறையின் வெள்ள முன்னறிவிப்பு மாதிரி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாக அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

கெடா மாநிலத்தைப் பொறுத்த வரை பாடாங் தெராப் மற்றும் சிக் ஆகிய மாவட்டங்கள் திடீர் வெள்ள அபாயத்தைக் கொண்டுள்ளன என்று அது தெரிவித்தது.

சிலாங்கூர்  மாநிலத்தின் பெட்டாலிங் (பெக்கான் ஹைக்கோம், டாமான்சாரா துணை மாவட்டங்கள்)  முக்கிம் கிள்ளான், முக்கிம் காப்பார், பெக்கான் பண்டமாரான், பெக்கான் காப்பார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்படும சூழலில் உள்ளன என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

சபா மாநிலத்தில் சண்டகான் மாவட்டத்திலும் சரவா மாநிலத்தின் சமரஹான் மற்றும் கூச்சிங்கின் சில பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வெளியேறுவதற்கு ஏதுவாக வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கையை வழங்குவதற்கான தயார் நிலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துறை குறிப்பிட்டது.

 


Pengarang :