ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போதைப் பொருள் கடத்தல் விசாரணையில் ஆஸி. காவல் துறைக்கு மலேசிய காவல் துறை உதவும்

கோலாலம்பூர், அக். 13 – போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக மலேசியர் ஒருவரைக் கைது செய்தது தொடர்பான விசாரணையில் மலேசிய காவல்துறை ஆஸ்திரேலிய மத்திய காவல்துறையுடன் ஒத்துழைக்கிறது.

மெல்பெர்னில் 622 கிலோ மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் 34 வயதான மலேசியரும்  அடங்குவார் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ கமருடின்  முகமது டின் கூறினார்.

நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளையும் சமரசமின்றி ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மெல்பெர்னுக்கு வந்த  கழிப்பறை காகித ரோல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து  நான்கு பேரை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 560 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (170 கோடி வெள்ளி) என மதிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :