ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் இதுவரை 11 செய்தியாளர்கள் பலி

அங்காரா, அக் 14- காஸா பகுதியில் இஸ்ரேலியா இராணுவம் நடத்தி வரும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்களில் குறைந்தது 11  செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சி.பி.ஜே.) நேற்று கூறியது.

தென் லெபனானில் கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோகிராபர் கொல்லப்பட்ட வேளையில் டோஹாவை தளமாகக் கொண்ட அல் ஜஸீரா  தொலைக்காட்சியின் இரு நிருபர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஏழு நாட்களாக நடந்த சண்டையில் குறைந்தது 11 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயமடைந்த வேளையில் மேலும் இருவரைக் காணவில்லை என்றும் நியுயார்க்கை தளமாகக் கொண்ட அந்த குழுவை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி தென் லெபானில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் பெய்ரூட்டைத் தளமாகக் கொண்ட செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார் எனவும் அது தெரிவித்தது.

இடைவிடாத வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காஸா பகுதியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிருபர்கள் மிகவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று சி.பி.ஜே. கூறியது.

நெருக்கடியான காலங்களில் முக்கியப் பணியை ஆற்றும் சிவிலியன்களாக நிருபர்கள் விளங்குவதால் போரிடும் தரப்புகள் அவர்களை இலக்காக கொள்ளக் கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.


Pengarang :