MEDIA STATEMENTNATIONAL

2024 பட்ஜெட்- 10 கோடி வெள்ளி நிதியை மித்ரா ஆக்ககரமான முறையில் செலவிடும்- டத்தோ ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
சமர்ப்பித்த 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா
எனப்படும் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவுக்கு 10 கோடி வெள்ளி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆக்ககரமான முறையிலும் உயர்நெறியைப் பின்பற்றியும்
செலவிடப்படும் என்று மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ
ஆர்.ரமணன் கூறினார்.
இந்த நிதியின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் குறைந்த
வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் நடுத்தர வருமானம் பெறும்
எம்40 தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் சொன்னார்.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள
இந்த நிதி மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார
மேம்பாட்டிற்கு கூடினபட்ச அனுகூலங்களை வழங்குவதை உறுதி
செய்வதில் தமது கடப்பாட்டை முறையாக ஆற்றவுள்ளதாக அவர்
சொன்னார்.
இந்திய சமூகத்தை மையமாகக் கொண்ட சமூக பொருளாதார
மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள மடாணி வரவு செலவுத்
திட்டத்தில் பத்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளத் தகவலை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார்.
மித்ரா தவிர, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் சீரமைப்புக்கு 5
கோடி வெள்ளியும் தெக்குன் கடனுதவித் திட்டத்திற்கு 3 கோடி
வெள்ளியும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் நேற்று தாக்கல் செய்த 39,380 கோடி வெள்ளி வரவு
செலவுத் திட்டத்தை வரவேற்றுப் பேசிய சுங்கை பூலோ நாடாளுமன்ற
உறுப்பினருமான டத்தோ ரமணன், அதிக நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய
நாட்டின் முதலாவது வரவு செலவுத் திட்டமாக இது விளங்குகிறது
என்றார்.

Pengarang :