SELANGOR

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடிச் சோதனை- 136 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், அக் 20- இங்குள்ள ஜாலான் முன்ஷி அப்துல்லாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் “பெந்த்ஹவுஸ்“ எனப்படும் சொகுசு குடியிருப்பு உள்பட பல வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 136 அந்நிய நாட்டினர் குடிநுழைவு துறையின் அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

அந்த குடியிருப்பில் தங்கியுள்ள அதிகமான அந்நிய நாட்டினரால் தங்கள் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் பொது மக்கள் அளித்த புகார் மற்றும் தமது துறையின் உளவு நடவடிக்கையின் அடிப்படையில் அந்த அதிரடிச் சோதனை நடத்தப் பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

அந்த சோதனை நடவடிக்கையில் வங்காளதேசம், இந்தோனேசியா, இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த 20 முதல் 70 வயதுக்குட்பட்ட 130 ஆண்களும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் நாட்டில் தங்கியிருந்தது மற்றும் முறையான பயணப் பத்திரங்களைக் கொண்டிராதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று அல்லது நான்கு அறைகள் கொண்ட வீடுகளில் குறைந்தது எட்டு பேர் வரை தங்கியிருந்தனர். அவர்களில் சிலரை  பெந்த்ஹவுசில் கைது செய்தோம். அவர்களின் நிதி ஆற்றல் அதிகம் என்பதை இது காட்டுகிறது என்றார் அவர்.

அந்த வீடுகளை அந்த அந்நிய நாட்டினரே சொந்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனரா அல்லது அவர்களின் முதலாளிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட குடியிருப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :