ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளியை முன்னிட்டு மூன்று போட்டிகளுக்கு கோல லங்காட் நகராண்மைக் கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், அக் 22- அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் குதூகலமாக்க கோல லங்காட் நகராண்மைக் கழகம் மூன்று போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ரங்கோலி தயாரிப்பு காணொளியை உருவாக்குதல், கலாசாரப் பலகாரங்கள் செய்தல் மற்றும் மருதாணி இடுதல் ஆகியவையே அந்த மூன்று போட்டிகளாகும் என்று நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும்  பன்முகக் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இந்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

 ரங்கோலி கோலத் தயாரிப்பு காணொளி தயாரிப்பு போட்டியில் 18 வயதுக்கும் மேற்பட்ட சமுதாயத்தின் அனைத்து நிலையிலான மக்களும் கலந்து கொள்ளலாம் என அது குறிப்பிட்டது. நாற்பது முதல் 60 வினாடி வரையிலான அந்த காணொளியை பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவேற்ற வேண்டும்.

இதற்கான விண்ணப்ப பாரங்களை கூகுள் பாரத்தில் பூர்த்தி செய்து அதன் இணைப்பில் மூலம் அனுப்ப வேண்டும். காணொளியைத் தயாரிப்பதற்கான செலவுகளை போட்டியாளர்களே ஏற்க வேண்டும். போட்டிக்கான நாள் நவம்பர் 14ஆம் தேதியாகும்.

கலாசாரப் பலகாரங்களைச் செய்யும் போட்டியில் பங்கேற்போர் குலாப் ஜாமுன் (இந்திய உணவு) சிவப்பு கடலை பலகாரம் (சீன உணவு) மற்றும் குவே கெங்காங் (மலாய் உணவு)  ஆகியவற்றை தயாரிக்க வேண்டும். போட்டியாளர்கள் சொந்த இனத்தின் பலகாரத்தை அல்லாமல் மற்ற இனத்தின் பலகாரத்தை தயாரிக்க வேண்டும் என்பது இப்போட்டியின் நிபந்தனையாகும்.

இப்போட்டியில் இருபது பேர் மட்டுமே பங்கேற்க முடியும். வரும் நவம்பர் 3ஆம் தேதிக்குள் போட்டிக்கான பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.

மருதாணி இடும் போட்டியில் 10 பங்கேற்பாளர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படும். போட்டியாளர்கள் தங்கள் பங்கேற்பை வரும் நவம்பர் 3ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும். 

இந்த போட்டிகளில் 18 வயதுக்கும் மேற்பட்ட சமுதாயத்தின் அனைத்து நிலையிலான மக்களும் கலந்து கொள்ளலாம். ஒருவர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் அனுப்ப முடியும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு கட்டணம் விதிக்கப்படாது.

பலகாரம் செய்தல் மற்றும் மருதாணி இடுதல் போட்டிகள் வரும் நவம்பர் 8ஆம் தேதி பந்திங், எம்.பி.கே.எல். விளையாட்டுத் தொகுதியில் நடைபெறும்


Pengarang :