NATIONAL

பகடிவதை, இணையக் குற்றங்கள் தொடர்பில் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதம்

கோலாலாலம்பூர், செப் 1- பள்ளிகளில் நிலவும் பகடிவதை பிரச்சனை
மற்றும் அதிகரித்து வரும் இணையக் குற்றங்களைக் களைவதில் அரச
மலேசிய போலீஸ் படையின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான
அரசாங்கத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய
மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.

இன்றைய கேள்வி நேரத்தின் போது பள்ளிகளில் அதிகரித்து வரும்
பகடிவதைப் பிரச்சனைகள் குறித்து பாலிக் பூலாவ் தொகுதி பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் டத்தோ முகமது பக்தியார் வான் சிக்
கல்வியமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது புதிய பாணியாக உருவெடுத்து வரும் இணையக் குற்றங்களை
கையாள்வதற்கு ஏதுவாக அரச மலேசிய போலீஸ் படையின் ஆற்றல்
மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள்
குறித்து உள்துறை அமைச்சரிடம் பாரிட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் முகமது இஸ்மி மாட் தாயிப் வினா தொடுப்பார்.

வரும் 2050ஆம் ஆண்டிற்குள் கார்பன் இல்லா நாட்டை உருவாக்குவது
மற்றும் தேசிய எரிசக்தி மாற்ற இலக்கு பெருந்திட்டத்தை அடைவது
ஆகியவற்றுக்கு உண்டாகும் செலவினத்தை ஈடு செய்ய இஸ்லாமிய
பசுமை நிதியை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் சிப்பாங்
ரெங்கம் தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ ஹஸ்னி
முகமது நிதியமைச்சரிடம் விளக்கம் கோருவார்.

அடையாளப் பத்திரங்களைக் கொண்டிராமல் இருக்கும் சமூக நல
இலாகாவின் பாதுகாப்பில் உள்ள சிறார்களின் எண்ணிக்கை குறித்து
ரந்தாவ் பாஞ்சாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ சித்தி ஜலிஹா முகமது யூசுப் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.


Pengarang :