MEDIA STATEMENTNATIONAL

வெள்ளத் தடுப்பு, சமூக நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு- மேரு உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், நவ 3- வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்கும் திட்டங்களுக்கு  சிலாங்கூர்   அரசின்  2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்  என்று தாம் எதிர்பார்ப்பதாக  மேரு சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பருவமழை மாற்றத்தை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கையாக அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்  வடிகால் மற்றும் கால்வாய்களைச்    சீரமைக்கும் பணி தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருவதாக மரியம் அப்துல் ரஷிட் கூறினார்.

வெள்ளப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான நீண்ட கால நடவடிக்கையாக  நான்கு நீர் சேகரிப்பு  குளங்களின் கட்டுமானத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப் படவுள்ளதாகக் கூறிய அவர், ஈராண்டுகளில் இத்திட்டம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது என்றார்.

அரசிடமிருந்து பெறப்படும்  ஒதுக்கீடு  முடிந்தவரை சிறந்த முறையில் பயன்படுத்தப் படும். ஏனெனில் மேரு தொகுதி மக்கள் பொருளாதார அடிப்படையில் மட்டுமல்லாமல்  உள்கட்டமைப்பு ரீதியாகவும் மாற்றத்தை விரும்புகிறார்கள். குறிப்பாக வெள்ளப் பிரச்சினை உடனடியாக சமாளிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் குறைந்த வருமானம் கொண்ட  பி40 தரப்பினராக உள்ளதைக் கருத்தில் கொண்டு  அடுத்தாண்டு பட்ஜெட் மக்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தும் என்றும் தாம்  நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம்  மாற்றுத் திறனாளிகள் உள்பட  தேவைப்படும் அனைவருக்கும்  நாம் உதவ முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர்  மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் நவம்பர் 10ஆம் தேதி  சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்.


Pengarang :