ECONOMYMEDIA STATEMENT

செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 600 பேர் தீபாவளி இலவசப் பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்

கிள்ளான், நவ 5- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. 

பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் நேற்று கம்போங் ஜாவா, எக்கேன் சேவ்  பேராங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டார்.

இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வை முறையாக ஒருங்கிணைப்பதில் பெரிதும் துணை புரிந்த செந்தோசா தொகுதி சிறப்பு பணிக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு 600 இலவச பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. மாநிலத்தில் அதிகமான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டத் தொகுதியாக செந்தோசா தொகுதி விளங்குகிறது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்ற முறையில் செந்தோசா தொகுதிக்கு கூடுதலாக பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் மற்றத் தொகுதிகளுக்கு இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில 300 முதல் 450 வரையிலான பற்றுச்சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வசதி குறைந்தவர்களும் பெருநாள் மகிழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக மாநில அரசு இந்த பற்றுச் சீட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த பற்றுச் சீட்டின் மதிப்பு இவ்வாண்டு தொடங்கி 100 வெள்ளியிலிருந்து 200 வெள்ளியாக அதிகரித்துள்ளது.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு 900க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செந்தோசா தொகுதி சேவை மையம் பெற்றுள்ளதாக குணராஜ் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி பேஸ்புக் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளுக்கும் 44 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில்  22,000 பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :