ECONOMYNATIONAL

பாலத்திற்கு அடியில் மனித எலும்புக்கூடு – ஆடவரின் மரணத்தில் சூது நிகழவில்லை- போலீசார் விளக்கம்

கோலாலம்பூர், நவ 16- சுபாங் அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ், ஜாலான் பெர்சியாரான் புத்ராவில் பாலம் ஒன்றின் அடியில் மனித எலும்புக்கூடு கடந்த வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய போலீசார், இச்சம்பவத்திற்கு குற்றச்செயல் காரணமல்ல என்பதை உறுதிப்படுத்தினர்.

கண்டுபிடிக்கபட்ட அந்த மனித உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை என்பது காவல் துறை மற்றும் செர்டாங் மருத்துவமனையின் உடற்கூறு நிபுணர்களின் சோதனையில் தெரிய வந்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸியான் வான் மாமாட் கூறினார்.

அந்த உடலின் நான்கு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உடற்கூறு நிபுணர்களின் சோதனையில் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆடவர் விழுந்திருக்கலாம் என நம்பப்படும் இடத்தின் உயரம் ஆகியவற்றுடன் அந்த உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் ஒத்துக் போகின்றன என்றார்.

இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து உயிரிழந்த ஆடவரின் குடும்பத்தினர் விசாரணை அதிகாரிகயைத் தொடர்பு கொண்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்தோனிசிய ஆடவருடையது என சந்தேகிக்கப்படும் அந்த எலும்புக்கூட்டை கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில் புத்ரா ஹைட் எல்.ஆர்.டி. துணை நிலையத்தில் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் கண்டுபிடித்தார்.

உயிரிழந்த அந்நபர் இந்தோனேசியாவின் கோத்தா சமரிண்டாவைச் சேர்ந்த ரிக்கி மடாகுணா (வயது 40) என அடையாளம் காணப்பட்டது. அந்த ஆடவர் மூன்று முதல் ஆறு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Pengarang :