ANTARABANGSAMEDIA STATEMENTPENDIDIKAN

பிலிப்பைன்ஸ் நாட்டில் பூகம்பம்- அறுவர் மரணம்

மணிலா, நவ.19 – தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன இருவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், மிண்டனாவ் தீவில் 60 கிலோ மீட்டர் (37 மைல்) ஆழத்தில் மையமிட்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் கூறியது.

இந்த இயற்கைப் பேரிடரில் மூன்று பேர் இறந்துவிட்டதாக தெற்கு கோடாபாடோ மாநிலத்தில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரத்தின் பேரிடர் அலுவலகத் தலைவர் அக்ரிபினோ டசரா  கூறினார்.

கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ஆடவரும் அவரின் மனைவியும் உயிரிழந்தனர். மற்றொரு பெண் வணிக வளாகத்தில் இறந்தார்.

நிலநடுக்கம் மையமிட்டிருந்த சாரங்கனி மாநிலத்தில்  குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில்  காணாமல் போன இருவரை  மீட்புப் படையினர் தேடி வருகின்றனர் என்று பேரிடர் மீட்பு அதிகாரி தெரிவித்தார் .

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம்  சீர் செய்யப்பட்டுள்ளதோடு பெரும்பாலான சாலைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக  கூறிய அதிகாரிகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சிறிய அளவில் மட்டுமே சேதம் ஏற்பட்டதாகத்  தெரிவித்தனர்.


Pengarang :