ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ள அபாயமுள்ள இடங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 19 –   திரங்கானு மற்றும் கிளந்தான்  ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர்ச்சியாக  கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக வெள்ளம் பாதிப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்குமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மது ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி நடக்குமாறு பொது மக்களை அவர் தனது முகநூல் பதிவின் வாயிலாக அறிவுறுத்தினார்.

இந்த வெள்ள அபாயம் தவிர்க்கப்பட வேண்டும் என தாம் பிரார்த்திப்பதோடு  இதனால் உயிர் சேதம் மற்றும் சொத்து சேதம் ஏற்படாது என்றும் நம்புவதாக அந்த பதிவில் அவர்  கூறியுள்ளார்.

நவம்பர் 18 ஆம் தேதி முதல் திரங்கானுவிலும்  கிளந்தான் மாநிலத்தின் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோல கிராய் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்யும்  ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதே காலகட்டத்தில் கிளந்தான், கெடா, பேராக், பகாங் மற்றும் சபா ஆகிய பகுதிகளிலும் தொடர் மழை பெய்யும் என அத்துறை  தெரிவித்துள்ளது.

கிளந்தானில், குவா மூசாங்கில் இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கெடா மாநிலத்தின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார்,  பொக்கோ செனா, பாடாங் தெராப், யான், பென்டாங், கோல மூடா, சிக் மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்படும்.

பேராக்கில் உள்ள உலு பேராக் மற்றும் கோல கங்சாரிலும் பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட், மாரான், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும்  கனத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :