SELANGOR

ஒவ்வொரு வளாகத்திலும் நீர் தேக்கங்களை (OSD) கட்டும் பணியைச் செயல்படுத்த புதிய நிபந்தனைகள்

ஷா ஆலம், நவ 20: அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வளாகத்திலும் நீர்த்தேக்கங்களை (OSD) கட்டும் பணியைச் செயல்படுத்த புதிய நிபந்தனைகளை மாநில அரசு அறிமுகப்படுத்தும்.

இந்த புதிய திட்டமானது ஒவ்வொரு அடுக்குமாடி கட்டிடமும் அதன் சொந்த OSD இருப்பதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படும். இதனால் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் என உள்கட்டமைப்பு மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

“இந்தப் புதிய திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்த விரும்புகிறோம், இதன் மூலம் தண்ணீர் பிரச்சனையை மூல இடத்திலிருந்தே சமாளிக்க முடியும்.

“நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால், ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் வெளியேறுவதால் அது வெள்ளமாக மாறுகிறது. தண்ணீரைத் தேக்கி, ஆறு அல்லது குளத்தில் வெளியிடுவதே சிறந்த வழி” என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் வெள்ளப் பிரச்சனை தொடர்பான செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் நூர் நஜன் முகமட் சலேயின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மேலும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த சுங்கை காப்பார் கெச்சிலில் அணை (பேரேஜ்) கட்டும் முதல் மாநிலமாகச் சிலாங்கூர் இருக்கும் என்று பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

மத்திய அரசின் RM220 மில்லியன் செலவில் அணை கட்டும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும், முடிவடைய இரண்டு முதல் ஒரு வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :