ECONOMYMEDIA STATEMENT

சிகிஞ்சானில் தரமான நெல் உற்பத்திக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ 24- சிகிஞ்சான் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு பல்வேறு தொழில்நுட்பங்களையும் விவசாய நுட்பங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நீர்பாசன முறையை தரம் உயர்த்தும் அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் இணையப் பொருள் (எல்.ஒ.டி.) போன்ற தொழில்நுட்பங்களையும் மாநில அரசு பயன்படுத்தி வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் நெல் உற்பத்தி அதிகம் உள்ள பகுதியாக சிகிஞ்சான் விளங்குகிறது. இங்கு ஒரு ஹெக்டருக்கு 12 டன் நெல் விளையும் வேளையில் மற்ற மாநிலங்களில் 4 டன் நெல் மட்டுமே கிடைக்கிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் நெல் விளைச்சல் ஈராண்டுகளுக்கு நான்கு போகமாக உள்ள வேளையில் இங்கு ஐந்து போகமாக உள்ளது . அதே சமயம் இந்த வட்டாரத்தில் நெல் விளைச்சலுக்கான சீராக செயலாக்க நடைமுறை மிகவும் சிறப்பானதாக உள்ளது என்றார் அவர்.

கிகிஞ்சானில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் நிலத்தைப் பண்படுத்துவது தொடங்கி தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பது, சீரான முறையில் உரமிடுவது மற்றும் களைகள் மற்றும் பூச்சிகளை அழிப்பதில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார். 

நெல்லை முன்கூட்டிய நாற்றாங்கால்களில் விதைத்து பின்னர் வளர்ந்த நாற்றுகளை வயல்களில்  நடவு செய்யும் பாணியை அவர்கள் பின்பற்றுவதாகவும் அமிருடின் கூறினார்.

ஆகவே கால மாற்றத்திற்கேற்ப விவசாயத் துறை தொடர்ந்து மேம்பாடு காண்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :