ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறப்பு ஓப் தாப்பிஸ் நடவடிக்கையில் 4,086 பேர் கைது- 42 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், நவ 24- அரச மலேசிய போலீஸ் படை கடந்த திங்கள்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை நாடு முழுவதும் மேற்கொண்ட சிறப்பு ஓப் தாப்பிஸ் நடவடிக்கையில் பல்வேறு போதைப் பொருள் குற்றங்களில் தொடர்புடைவர்கள் என சந்தேகிக்கப்படும் 4,086 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெல்டா/பெல்கிரா நிலக்குடியேற்றப் பகுதிகள், மக்கள் வீடமைப்புத் திட்ட பகுதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனைகள், சட்டவிரோத மீன்பிடி படகுத் துறைகள், மொத்த விற்பனை சந்தைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்  இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 4,564 சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில் 14 முதல் 70 வயது வரையிலானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கைகளில் 708,9245 வெள்ளி மதிப்புள்ள 43 கிலோ போதைப் பொருள் மற்றும் 702 லிட்டர் போதைத் திரவம் கைப்பற்றப்பட்டன என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனையின் போது 336,019 வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் 1988ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 25,019 வெள்ளி ரொக்கம், 128,400  வெள்ளி பெறுமானமுள்ள வாகனங்கள், 8,975 வெள்ளி மதிப்புள்ள நகைகள் மற்றும் 40,400 வெள்ளி மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர். 

 


Pengarang :