ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தில் பெண்கள் பற்றிய கண்ணியமற்றக் கருத்து-  எதிர்க்கட்சியினரின் தரமற்றச் செயலைக் காட்டுகிறது

புத்ராஜெயா, நவ 25 – மக்களவை விவாதத்தின் போது பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் செயலை   கெஅடிலான் ராக்யாட் கட்சியின் மகளிர் தலைவர் ஃபாட்லினா சிடேக் கடுமையாகச் சாடினார்.

குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பெயரை குறிப்பிடாத அவர்,  அவர்களின் விவாதத்தின் தரம் குறித்து கவலை தெரிவித்தார்.

குடும்ப வளர்ச்சி என்பது ஒரு முக்கியமான பிரச்சினை, அது கவனத்திற்கு உரியது  என்று இன்று கெஅடிலான் தேசிய மகளிர் மாநாட்டில்  தொடக்க உரையாற்றிய போது அவர் கூறினார்.

இருப்பினும்,  சில உறுப்பினர்கள் மரியாதைக்குரிய அந்த  தளத்தைப் பயன்படுத்திக் கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதை விடுத்து  மனைவிகளின் எண்ணிக்கை பற்றிய விஷயத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

எனக்கு இன்னும் மூன்று ஒதுக்கீடுகள் உள்ளன. நாங்கள் பலதார திருமணம் செய்வோம் என அவர்கள் அவையில் கூறுகின்றனர். என்ன மாதிரியான மனநிலை இது?  தங்கள் எம்.பி.க்கள் குறுகிய மனப்பான்மையுடன் மக்களவையில் பாலியல் ரீதியாக பேசுவதற்காகவா மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?  என்று  அவர் சொன்னார்.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில்  400 க்கும் மேற்பட்ட மகளிர் பேராளர்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த நவம்பர் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூத்த பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், பலதார மணம் செய்யும் ஆண்களுக்கு அரசாங்கம் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :