MEDIA STATEMENTNATIONAL

குடியுரிமை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை உள்துறை அமைச்சு விரைவுபடுத்தும்

புத்ராஜெயா, நவ 27 – குடியுரிமை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை உள்துறை அமைச்சு  விரைவுபடுத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தனது அமைச்சின் முன்னுரிமை எனக் கூறிய அவர், அமைச்சரவை நிலையிலான விவாதத்தில் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டு மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார்.

இப்போது இந்த மசோதாவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் மொழியும் செம்மைப் படுத்தப்படுகின்றன என்று நேற்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற   பி.கே.ஆர். கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவையின் போது அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமை தொடர்பான திருத்தம் கூட்டரசு அரசியலமைப்பை உட்படுத்தியதா அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளை மட்டுமே உள்ளடக்கியதா என்பதை உள்துறை அமைச்சு இறுதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரோல் முறை, கட்டாய வருகை ஆணை மற்றும் கைதிகளுக்கு உரிமம் பெற்ற விடுதலை குறித்து கருத்துரைத்த அவர்,  சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதில் நேர்மறையான விளைவுகளை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளதோடு இதில் சம்பந்தப்பட்ட 800 கைதிகளில் ஒருவர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பினார் என்றார்.

நுட்ப ரீதியாக பார்த்தால் அவர்கள் சிறைக் கைதிகள்தான். ஆனால் அவர்கள் வெளியில் இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்.டபள்யூ.கோர்ப், பெனாசோனிக்   உள்ளிட்ட கிட்டத்தட்ட 200 நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடி வருகிறோம் என்றார் அவர்.

கைதிகள் மீது எங்களின் அக்கறையை வெளிப்படுத்த இதுபோன்ற பல திட்டங்களை நாங்கள் தொடர்வோம் என்றும் அவர் கூறினார்.


Pengarang :