ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

பாதுகாவலர் சாவடியில் நான்கு பிள்ளைகள் கைவிடப்பட்டச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஈப்போ, நவ 29- பேராக் தெங்கா மாவட்ட அரசு நிர்வாக அலுவலத்தின் பாதுகாவலர் சாவடியில் நான்கு பிள்ளைகள் கைவிடப்பட்டச் சம்பவம் தொடர்பில் அப்பிள்ளைகளின் பெற்றோர் என சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவ்விருவரும் கம்போங் காஜாவின் வெவ்வேறு இடங்களில்  கைது செய்யப்பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹபிசுல் ஹெல்மி ஹம்சா கூறினார்.

கம்போங் காஜா சமூக நலத்துறையிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை கடந்த திங்கள்கிழமை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோடேனாஸ் மோட்டார் சைக்கிள், கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பெண்மணி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதோடு அவரிடமிருந்து கைப்பேசியும் கைப்பற்றப்பட்டது என்றார் அவர்.

பிள்ளைகளை முறையாகப் பராமரிக்காமல் கைவிட்டது தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 33(ஏ) பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 23ஆம் தேதி எட்டு மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதர சகோதரிகள் பேராக் தெங்கா மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் பாதுகாவலர் சாவடியின் முன் கைவிடப்பட்டனர்.


Pengarang :