MEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் இரு குரங்கு அம்மை நோய்ச் சம்பவங்கள் பதிவு- நாடு முழுவதும் 9 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், நவ 29- சிலாங்கூரில் இரு குரங்கு அம்மை நோய்ச் சம்பவங்கள் கடந்த மாதம் கண்டறியப்பட்டதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் இந்நோய் தொடர்பான ஒன்பது சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டதாக துணை சுகாதார அமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சவுனி கூறினார்.

அவற்றில் கோலாலம்பூரில் ஆறு சம்பவங்களும் சரவா மாநிலத்தில் ஒரு சம்பவமும் பதிவாகின. முதல் இரண்டு சம்பவங்கள் கோலாலம்பூரிலும் மூன்றாவது மற்றும் நான்காவது சம்பவங்கள் சிலாங்கூரிலும் கண்டறியப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் மேலும் ஐந்து சம்பவங்கள் சரவா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய ஒரு சம்பவம் கோலாலம்பூரில் அடையாளம் காணப்பட்டது என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் எண்மர் மலேசியர்களாக உள்ள வேளையில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர் மேலும் கூறினார்.

மக்களவையில் இன்று ஜெராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் சப்ரி அஸித் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு பதிலளித்தார். கோவிட்-19 பெருந்தொற்றைப் போல் இந்த குரங்கு அம்மை நோயும் தீவிரமாக பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

குடிநுழைவுத்  துறையின் ஒத்துழைப்புடன் நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான சோதனைகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக துணையமைச்சர் மேலும் சொன்னார்.


Pengarang :