MEDIA STATEMENTNATIONAL

சிறந்த சுற்றுச்சூழலுடன் கூடிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு மையத்தை சிலாங்கூர் சுல்தான் திறந்து வைத்தார்

கிள்ளான், நவ 29- இங்குள்ள ‘அக்காஸியா பை பசிபிக் சீனியர் லிவிங்‘ எனும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மையத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் ஹாஜா நோராஷிகினும் சிறப்பு பிரமுகரான பங்கேற்ற இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

மூத்த குடிமக்களுக்கு உகந்த சூழலைக் கொண்ட இந்த அக்காஸியா மையம் தங்கள் நிறுவனத்தின் முதலாவது மூத்த குடிமக்கள் பராமரிப்பு மையமாக விளங்குவதாக கொலம்பியா பசிபிக் மேனெஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நேட் மெக்லமோர் கூறினார்.

இந்த மையத்தில் மொத்தம் 136 அறைகள் இருப்பதாகக் கூறிய அவர், அவரவர் வசதிக்கேற்ப அந்த அறைகளுக்கு மாதம் வெ.8,000 முதல் வெ.10,000 வெள்ளி வரை வாடகை விதிக்கப்படுகிறது என்றார்.

வாடிக்கையாளர் பாதுகாப்பு குறிப்பாக கீழே விழாமலிருப்பதற்கான அம்சங்களையும் இந்த மையம் கொண்டுள்ளது. உல்லாச ரிசோர்ட்டிடிற்கு இணையான வசதிகள் இந்த மையத்தில் உள்ளன. நீச்சல் குளம், பொழுதுபோக்கு அறை, பிஸியோதெராப்பி உள்ளிட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவ வசதிகளைப் பொறுத்த வரை, மருத்துவ மதிப்பீடு, மருத்துவ நிபுணர்களின் அட்டவணையிடப்பட்ட மருத்துவச் சோதனை, மருந்துகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப ஊட்டச் சத்துணவு ஆகியவையும் இங்கு வழங்கப்படும் என்றார் அவர்.

 


Pengarang :