ANTARABANGSA

பாலஸ்தீனத்தில் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர கட்டார் தீவிர முயற்சி

டோஹா, டிச 4- காஸா தீபகற்பத்தில் நிரந்தர போர் நிறுத்தத்தை
அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இடைக்கால போர் நிறுத்தத்தை
தொடர்வதற்கான முயற்சிகளை கட்டார் இதர நாடுகளும் இணைந்து
தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த பழிவாங்கும் நோக்கிலான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான
பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதில் கட்டார் தீவிரமாக ஈடுபட்டு
வருகிறது என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின்
அப்துல் ரஹ்மான் பின் ஜாஸிம் அல்-தானி கூறினார்.

டோஹாவில் நடைபெறும் 44வது வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு
மன்றத்தின் மாநாட்டிற்கான அமைச்சர் நிலை ஏற்பாட்டுக் கூட்டத்தில்
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேலிய மக்கள் புரிந்து வரும் குற்றங்களைக் கடுமையாகச் சாடிய
அவர், போர் குற்றங்கள் தொடர்பில் குறிப்பாகப் பொது மக்கள், உதவிப்
பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான வசதிகள் மீது மேற்கொள்ளப்படும்
தாக்குதல் மீது பாகுபாடின்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்று வலியுறுத்தினார்.

அண்மைய சில தினங்களாக நிகழ்ந்து வரும் இஸ்ரேலியர்களின்
ஆக்கிரமிப்பு மற்றும் காஸா தீபகற்பத்தில் உள்ள நமது சகோதரர்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும் கோரத் தாக்குதல்கள் மற்றும்
அடக்குமுறைகளை இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள்
கவனித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் காஸா மீதான தாக்குதல்களைக் கடந்த வெள்ளிக்கிழமைத் தொடக்கின.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்
தாக்குதல்களில் 509 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 1316 பேர்
காயமடைந்துள்ளனர்.


Pengarang :