MEDIA STATEMENTNATIONAL

மேரு தொகுதி ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இலவச காய்கறிகள் விநியோகம்

கிள்ளான், டிச 7- மேரு சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் தொகுதி மக்களுக்கு இம்மாத இறுதியில் இலவசமாக காய்கறிகள் வழங்கப்படும்.

பொது மக்கள் தங்கள் சமையல் பொருள்களுக்கான செலவினத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக கங்கோங், பாயாம் கடுகுக் கீரை, வெள்ளரி போன்ற காய்கறிகளை இலவசமாக வழங்கும் இயக்கத்தை தாங்கள் மேற்கொள்வதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாம் அப்துல் ரஷிட் கூறினார்.

மேரு தொகுதியில் உள்ள  பொது மக்களுக்கு உதவும் எங்களின் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை தாம் உணர்ந்துள்ளோம் என அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் சிலாங்கூர்  மாநில அரசின் ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் தவிர்த்து பொது மக்களுக்கு காய்கறிகறிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை மேரு தொகுதி அமல்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் பைகளுடன் வந்து தங்களுக்குத் தேவையான காறிகளை தேர்வு செய்து எடுத்துச் செல்லலாம் என்று நேற்று இங்குள்ள தாமான் காப்பார் செத்தியாவில் நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது அவர் சொன்னார்.

இதனிடையே, இங்கு நடத்தப்பட்ட மலிவு விற்பனையில் சுமார் 400 கோழிகள் விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் விற்பனை ஒருங்கிணைப்பாளர்  முகமது நாபிஷ் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

இங்கு 500 கோழிகள் 300 தட்டு முட்டைகள் மற்றும் 300 பாக்கெட் அரிசியை விற்பனைக்கு வைத்திருந்தோம். சந்தையை விட விலை குறைவாகவும் தரமாகவும் இருந்த காரணத்தால் இந்த மூன்று பொருள்களும் பொது மக்களின் முதன்மைத் தேர்வாக இருந்தன என்றார் அவர்.


Pengarang :