ECONOMY

138,982 லிட்டர் மானிய விலை டீசலை ஏற்றிய கப்பல் கோலக் கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், டிச 9- மானிய விலை டீசலை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அரச மலேசிய போலீஸ் படையினர் கோலக் கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 138,982 லிட்டர் மானிய விலை டீசல், பம்ப் சாதனங்கள், இரப்பர் குழாய் உள்பட அந்த கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ஹஸானி கசாலி கூறினார்.

கப்பல் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 43 லட்சம் வெள்ளியாகும் எனக் கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

வனவிலங்கு குற்ற மையம் மற்றும் சிறப்பு உளவு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஆறு அந்நிய நாட்டினரும் கைது செய்யப்ப்ட்டதாகச் சொன்னார்.

இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் மானிய விலை டீசல் கடத்தலுக்கு  எதிராக 68 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இந்சோதனைகளில் 7 கோடியே 38 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டு 240 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருள்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவினட அமைச்சுடன் காவல் துறை தொடர்ந்து ஒத்ழைப்பை நல்கி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு ஏதுவாக இதன் தொடர்பான தகவல்களை காவல் துறைக்கு தந்து உதவுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Pengarang :