ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சொக்சோ தரவுகள் மீது இணையத் தாக்குதல்- ஆருடங்களை வெளியிடுவதை நிறுத்துவீர்! அமைச்சர் வலியுறுத்து

கோலாலம்பூர்,  டிச 11- சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின்  (சொக்சோ) உள்கட்டமைப்பு மற்றும் அதன் தோற்றத்தின் மீது குறிவைத்து இணையத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை முடிப்பதற்கு அனைத்து தரப்பினரும் உள் தடயவியல் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்ட ஆதாரமற்ற ஆருடங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இத்தகைய ஆருடங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதோடு  சமூகத்தின் மத்தியில் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்று அவர்   தெரிவித்தார்.

இந்த தொடர் இணைய ஊடுருவல்களால்  சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாக விளங்கும் சொக்சோவின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 2ம் தேதி நடந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட எந்த தரப்பினரும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று அமைச்சு மீண்டும் உறுதி அளிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த இணையத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு தற்போது  மீட்பு மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

அந்த சமூக பாதுகாப்பு அமைப்பின் தகவல் தளம் மற்றும் இணையதளம் மீது  கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட  இணைய ஊடுருவல் நடவடிக்கை  சொக்சோ உறுப்பினர்கள், முதலாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை சீர்குலைக்காது என்று கடந்த வெள்ளிக்கிழமை சொக்சோ  உறுதியளித்திருந்தது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகளுக்கு அனுகூலங்கள், இழப்பீடு மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகிய அனைத்து தொகைகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி வழங்கப்படும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.


Pengarang :