ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புதிய குடிநீர் கட்டண  செயல்முறை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், டிச.11- தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளுக்கான புதிய குடிநீர்க்  கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட வழிமுறை அடுத்த வார அமைச்சரவை கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த செயல்முறையைப் பயன்படுத்தும் போது வீடுகளுக்கான குடிநீர்க் கட்டண  கணக்குகள் உட்பட தற்போதுள்ள நீர் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

வருமானத்தை ஈட்டித் தராத குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் நீர் தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்

மடாணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் அமைக்கப்பட்ட  இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை  அமைச்சின் கண்காட்சி சாவடியில் எரிசக்தி திறன் (சேமிப்பு) 4.0 திட்டத்தின் தொடக்க நிகழ்வில் அவர் இதனைக்  கூறினார்.

மாநிலங்களில் குடிநீர் கட்டணத்தை மறுஆய்வு செய்து தண்ணீர் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க தேசிய நீர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட  அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டதாக கடந்த  நவம்பர் 9 ஆம் தேதி மக்களவையில்   நிக் நஸ்மி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எரிசக்தி திறன் 4.0 திட்டம் குறித்துக் கருத்துரைத்த நிக் நஸ்மி,  எரிசக்தி ஆணையத்தினால்  வழங்கப்படும் நான்கு அல்லது ஐந்து நட்சத்திர லேபிள்களைக் கொண்ட குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்தும்  குளிர் பதன  மற்றும் குளிர்சாதன பெட்டிகளை வாங்கும் பொதுமக்கள் 400 வெள்ளி வரை தள்ளுபடி பெறலாம் என்று  கூறினார்

Pengarang :