MEDIA STATEMENTNATIONAL

சந்தேகப் பேர்வழிகள் எட்டி உதைத்ததில் போலீஸ்காரரின் மணிக்கட்டில் எலும்பு முறிவு

கோத்தா பாரு, டிச 11- இங்குள்ள மெலோர், கம்போங் பங்கால் பீசாங் எனும் இடத்தில போதைப் பொருள் சோதனையை மேற்கொண்டிருந்த போது இரு சந்தேக நபர்களால் உட்டி உதைக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவுக்குள்ளானார்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு போலீஸ்காரர்கள் நேற்று விடியற்காலை 3.45 மணியளவில் 40 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் பயணம் செய்த காரை பண்டார் செட்டிலிட் பாசீர் தும்போவில் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முற்பட்டதாக  கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரோஸ்டி டாவுட் கூறினார்.

எனினும், அவர்கள் போலீஸ்காரர்களின் உத்தரவை மீறி அங்கிருந்து காரில் படுவேகத்தில் தப்பிச் செல்ல முற்பட்டனர். பங்கால் பீசாங் எனும் பகுதியில் அவர்களை போலீஸ்காரர்கள் வெற்றிகரமாக மடக்கி பிடித்தனர்.

அவ்விருவரையும் கைது செய்ய முயன்ற போது அவர்கள் மிகவும் மூர்த்த்த்தனமாக நடந்து கொண்டதோடு அங்கிருந்து தப்புவதற்காக போலீஸ்காரர் ஒருவரை எட்டி உதைத்தனர். இச்சம்பவத்தில் அந்த போலீஸ்காரரின் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்றார் அவர்.

எனினும், காயத்தையும் பொருட்படுத்தாமல் அந்த போலீஸ்காரர் தனது சகாவுடன் சேர்ந்த அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும் மடக்கிப் பிடித்தார் என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அவ்விரு நபர்களும் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது சிறு நீர் சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் உள்ளிட்ட 23 குற்றப்பதிவுகளை அவர்கள் கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது என்றார்.


Pengarang :