NATIONAL

கோவிட்-19  அதிகரிப்பு- மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் விரைவில்  உத்தரவு வெளியாகும்

புத்ராஜெயா, டிச  14- அண்மைய காலமாக கோவிட் -19  நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு எளிதில்  பாதிக்கக்கூடிய மற்றும் அதிக ஆபத்துள்ள தரப்பினருக்கு மூன்றாவது ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான உத்தரவை சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடும்.

தடுப்பூசி கையிருப்பு  போதுமான அளவு உள்ளதோடு அவை  இன்னும் காலாவதி தேதியை எட்டவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

மேலும், பிறழ்வுகள் மற்றும் கோவிட்-19 புதிய தொற்றுப் பரவலிலிருந்து  பொதுமக்களைப் பாதுகாப்பதில் மூன்றாவது ஊக்கத் தடுப்பூசி  திறம்பட செயலாற்றும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க மூன்றாவது தடுப்பூசி அவசியமாகும் என அவர் சொன்னார்.

கோவிட்-19 சம்பவங்களில் சிறிதளவு அதிகரிப்பு இருப்பதை நாங்கள் அறிவோம். ஆக சமீபத்தில் இந்த எண்ணிக்கை 12,000 க்கும் அதிகமாக உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்குக் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக இத்தகவலை அமைச்சரவையிடம் நேற்று தெரிவித்தேன். இவ்விகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது என்று அவர் இன்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

நாட்டில் 49வது நோய்த் தொற்று  வாரத்தில்  கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  12,757 ஆக அதிகரித்துள்ளது.
அதற்கு  முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 6,796 சம்பவங்களாக இருந்தன.

ஆண்டு இறுதி விடுமுறையை முன்னிட்டு  மக்கள் நாடு முழுவதும்  முகக்கவரி அணியாமல் பயணிப்பது மற்றும் வானிலை  ஆகியவை இந்த அதிகரிப்புக்கு காரணமாக விளங்குவதாக  ஜூல்கிப்ளி கூறினார்.


Pengarang :