ECONOMYNATIONAL

மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பொது உபசரிப்பில் 5,000 பேர் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, டிச 17- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற சதுக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற மாநில நிலையிலான கிறிஸ்துமஸ் தின பொது உபசரிப்பில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

மாலை 6.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை நடைபெற்ற இந்த பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் டாக்டர் ஜோனி இயோவின் வயலின் இசை நிகழ்ச்சி சக்கர நாற்காலி நடனம், முக ஓவியம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக ரொட்டி ஜோன், பெர்கர், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன.

இந்த உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம், சிலாங்கூர் மாநிலம் கொண்டுள்ள நல்லிணக்கம் மாநிலத்தில் சுற்றுலாத் துறையை ஈர்ப்பதற்கான மையமாக விளங்குவதாக குறிப்பிட்டார்.

பல்வகைத் தன்மையைக் கொண்ட ஒப்பற்ற மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. தேசிய ஒற்றுமைக்கான அடித்தளமாக இம்மாநிலம் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஊராட்சி மன்றங்கள், மாவட்ட மன்றங்களின் பங்கேற்புடன் பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில்ன நிகழ்வுகளுடன் வரும் ஆண்டுகளிலும் இத்தகைய பொது உபசரிப்புகள் தொடரப்பட வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கும் 73 கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகளுக்கு 678,000 வெள்ளியை மானியத்தை இங் வழங்கினார்.


Pengarang :