ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர், மற்றும் மூன்று மாநிலங்களில் வெள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச.17 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 இல் இருந்து 69 பேராக உயர்ந்துள்ளது.

இம்மாநிலத்தில் நேற்று 19 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் அந்த எண்ணிக்கை 23   குடும்பங்களைச் சேர்ந்த 69  பேராக உயர்ந்துள்ளதாக மாநில சமூக நலத் துறையின் பேரிடர் அகப்பக்கம் தெரிவித்தது.

கோல சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெயா செத்தியா தேசியப் பள்ளி மற்றும் பாரிட் மஹாங் சமூகக் மண்டபத்தில்   இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் இயங்கி வரும் வேளையில் கிள்ளான், பாடாங் ஜாவாவில் புதிதாக மேலும் ஒரு மையம்  திறக்கப்பட்டுள்ளது.

கிள்ளான், பெக்கான் மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாய் ஆற்றில் நீர் மட்டம் இன்று காலை 8.30 மணியளவில் 4.29 மீட்டர் உயரத்தை பதிவு செய்துள்ளதாக  publicinfobanjir. water.gov.my   என்ற அந்த அகப்பக்கம் குறிப்பிட்டது.

இதற்கிடையில், இன்று காலை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ள நிலைமை மோசமடைந்ததால் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

திரங்கானுவில்,   இன்று காலை 9 மணி நிலவரப்படி ஆறு மாவட்டங்களில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2,693 பேர் 37 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8.00 மணிக்கு 36 நிவாரண மையங்களில் 2,622 பேர் (637 குடும்பங்கள்) தங்கியிருந்தனர்.

கிளந்தானில் நேற்றிரவு 1,170 குடும்பங்களைச் சேர்ந்த 3,780 பேர் துயர் துடைப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இன்று காலை 9.00 மணிக்கு அந்த எண்ணிக்கை 1,282 குடும்பங்களைச் சேர்ந்த  4,114 பேராக உயர்வு கண்டது.


Pengarang :