SELANGOR

நிலச் சரிவினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- வட்டார குடியிருப்பாளர்கள் அச்சம்

சுபாங் ஜெயா, டிச 20- இங்குள்ள தாமான் வாவாசான் பூச்சோங்கில் கடந்த
சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜாலான் வாவாசான் 3/9
மற்றும் ஜாலான் வாவாசான் 3/14 பகுதியில் உள்ள 9 வீடுகளின்
குடியிருப்பாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் தாங்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக அந்த
குடியிருப்பு பகுதியில் உள்ள இதர குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அந்த வரிசையில் உள்ள
இதர வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தாங்கள்
உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிலச்சரிவு சம்பவம் ஏற்பட்ட தினம் முதல் எங்களால் நிம்மதியாக
உறங்க முடியவில்லை. அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சம் எங்கள்
மனதில் மேலோங்கி நிற்கிறது என அவர் தெரிவித்தனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தாங்கள் இங்கு வசித்து வரும்
நிலையில் இத்தகைய பேரிடர் நிகழ்வது இதுவே முதன் முறையாகும்
என்று லாவ் மீ யேங் (வயது 69) என்ற குடியிருப்பாளர் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று நாங்கள் அனைவரும் உறங்கவேயில்லை.
அசம்பாவிதம் நிகழலாம் என்ற அச்சத்தில் இரவு முழுவதும்
விழித்திருந்தோம். இரவு வேளைகளில் குறிப்பாக மழை பெய்யும் போது
நிலச் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக நாங்கள் பெரும்பாலும்
உறங்குவதில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு வசித்து வரும் தங்களுக்கு
இந்த சம்பவம் மிகவும் மோசமான அனுபவமாக விளங்குவதாக மேய்
யோங் சுயே (வயது 43) என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியும் எங்கள் குடியிருப்பும் மிக அருகில் உள்ளன.
அதனால் மழை பெய்யும் சமயங்களில் நாங்கள் விழித்திருந்து
நிலைமைய காணித்து வருகிறோம் என்றார் அவர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் வசிப்பதற்கு
பாதுகாப்பானவை என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடையத்
தேவையில்லை என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ.
அன்பழகன் கூறினார்.


Pengarang :