ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியாவில் கோவிட்-19 ஜே.என்.1 திரிபு– சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 23- எளிதில் தொற்றக்கூடிய கோவிட்-19 நோய்த் தொற்றின் ஜே.என்.1 திரிபு மலேசியாவிலும்  பரவியுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஆகவே, நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி சுற்றுலா  செல்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி வலியுறுத்தப் பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சரவா மாநிலத்தின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 61 மாதிரிகளில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு துணை திரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜே.என்.1 (49 விழுக்காடு) மற்றும் எச்.கே.3 (26 விழுக்காடு) ஆகியவையே அவ்விரு துணைத் திரிபுகளாகும்.

இந்த மாதிரிகள் முதன் முறையாக கூச்சிங்/சமரஹானில் அடையாளம் காணப்பட்ட வேளையில் சிபுவிலும் சில சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று மலேசிய சரவா பல்கலைக்கழகத்தின் உடல் நலம் மற்றும் சமூக மருத்துவக் கழக இயக்குநர் டாக்டர் டேவிட் பெரேரா கூறினார்.

ஜே.என்.1 திரிபுகள் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து கோவிட்-19 நோய்த் தொற்றின் கவனிக்கக் கூடிய திரிபு வகையாக இந்த ஜே.என்.1 தொற்றை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.

இந்த ஜே.என்.1 தொற்று அண்மைய சில மாதங்களாக வெகு விரைவாக பரவி வருவதைக் கருத்தில் கொள்கையில் அது எளிதில் தொற்றக்கூடிய நோய் என கருதப்படுவதாக தொற்று நோயியல் நிபுணர் நிறைநிலைப் பேராசிரியர் டத்தோ டாக்டர் லாம் சாய் கிட் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்ப்பதில் திரிபு சிறப்பானதாக இருக்கிறது. செல்களுக்குள் நுழைவதற்கு அவசியமான ஸ்பைக் புதரங்களை பாதிக்கக்கூடிய கூடுதல் பிறழ்வை இந்த ஜே.என்.1 கொணடுள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :