ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விமான நிலையத்தில் நெரிசலா? குடிநுழைவுத்துறை மறுப்பு

புத்ராஜெயா, டிச 25 – சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் விமான நிலையம் ஒன்று  நெரிசலாகக் காணப்படுவதுபோல்  சித்தரிக்கும் காணொளி, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தார் கட்டிடத்தின் டேவான் பாஸில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய காணொளியாகும்  என்று குடிநுழைவுத் துறை தலைமை  இயக்குநர்  டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

சீனாவிலிருந்து வரும் அதிக எண்ணிக்கையிலான  சுற்றுப் பயணிகளால்  விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலைக் சித்தரிக்கும் காணொளி  அது என்பதை அவர் என்பதை  மறுத்துள்ளார்.

கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட  எல்லை தாண்டிய பயணக் கட்டுப்பாடு  முடிவடைந்த பின்னர் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட காணொளி அதுவாகும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் எல்லை கடந்த போது இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது எனக் கூறிய அவர், அந்த காணொளி  நாட்டின் அனைத்துலக  விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

சுல்தான் இஸ்கந்தார் கட்டிடத்தில் சாதாரண நாட்களில் நாட்டிற்கு வரும் மற்றும் வெளியேறும் பயணிகள் எண்ணிக்கை சராசரியாக  250,000 பேராக உள்ள வேளையில் பெருநாள் காலங்களில் இது இரட்டிப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதால், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர்  அறிவுறுத்தினார்.


Pengarang :