ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ கெம்பாங்கான் சந்தையில் புதிய கழிப்பறை கட்ட கூடுதலாக வெ.100,000 நிதி- அமைச்சர் ஙா தகவல்

சுபாங் ஜெயா, டிச 28- ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள “பசார் ராக்யாட்“ சந்தையில் புதிதாக பொதுக் கழிப்பறை கட்ட கூடுதல் ஒதுக்கீடாக 100,000 வெள்ளியை வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு வழங்கும்.

அந்த சந்தையில் வர்ணம் பூசுவது, கட்டமைப்பை வலுப்படுத்துவது, இரும்புக் கதவுகள் மற்றும் கால்வாய்களை சீரமைப்பது ஆகிய பணிகளுக்காக ஏற்கனவே 300,000 வெள்ளியை அமைச்சு ஒதுக்கியிருந்தது.

புதிதாக நிர்மாணிக்கப்படும் கழிப்பறை பி.எம்.டபள்யூ. தரத்தை அதாவது சுத்தம், நறுமணம் மற்றும் வசீகரிக்கும் வகையில் அமைந்திருக்கும் என அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

அந்த சந்தையில் முதல் கட்ட மறுசீரமைப்புப் பணிகள் முற்றுப் பெற்று விட்டன. எனினும், புதிய கழிப்பறையை நிர்மாணிப்பது, கூடுதலாக மின் விசிறிகளைப் பொருத்துவது உள்ளிட்ட உபரிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

பூச்சோங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் புதிதாக கழிப்பறை கட்டுவது மற்றும் மின் விசிறி பொருத்துவது ஆகிய பணிகளுக்கு 100,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்கிறேன். இந்த பணிகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சின் “செந்தோஹான் காசே“ கீழ் அந்த சந்தைக்கான பயணத் தொடரின் இறுதி வருகையை இன்று மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் தாங்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று 70  கோடி வெள்ளி செலவில் 5,196 திட்டங்களை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.


Pengarang :