ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையன் பலி

புக்கிட் மெர்தாஜம், டிச 31- பினாங்கு மச்சாங் புபோக்கில் நேற்றிரவு நிகழந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய மற்றும் 16 முந்தைய குற்றப் பதிவுகள் கொண்ட நபரை பினாங்கு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

நள்ளிரவு 12.35 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் புரோட்டான் எக்ஸ்70 ரக வாகனம் சுங்கை லெம்பு நோக்கிச் சென்றதை போலீசார் முதலில் கண்டறிந்தாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

பினாங்கு  மாநில போலீஸ் தலைமையகத்தின் கடும் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த  (டி9)  குழு அந்த  வாகனத்தை நிறுத்துமாறு  அதன் ஓட்டுநருக்கு  உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும்,  அந்த நபர் தப்பிச் செல்லும் நோக்கில் வேகமெடுத்ததோடு  போலீசாரை நோக்கி  துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக அவர் சொன்னார்.

தங்களை தற்காத்துக் கொள்ளும் நோக்கில் அந்த நபர் ஓட்டிச் சென்ற கார் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது, ஆனால் அவரின் கார் இன்னும் வேகமெடுத்தது. எங்கள் குழு அவரை சுமார் 200 மீட்டர் தூரம் துரத்திய பிறகு, சந்தேக நபரின் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் மோதியது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

காரை விட்டிறங்கிய அந்நபர் போலீசாரை நோக்கி சுட்டார். வேறு வழியின்றி போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர் என்றார் அவர்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து  விட்டதாகக் கூறிய அவர்,  பினாங்கு  முகவரியைக் கொண்ட அந்த  44 வயது  சந்தேக நபர் சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது என்றார்


Pengarang :