MEDIA STATEMENTNATIONAL

உணவு வாங்கச் சென்றபோது நேர்ந்த சம்பவம்- ஆடவரின் காரை களவாடிச் சென்றான் கயவன்

கோல சிலாங்கூர், ஜன 6- ஆடவர் ஒருவர் காலை உணவு வாங்குவதற்காக கார் இயந்திரம் இயங்கிய நிலையில் சாலையோரம் நிறுத்தி விட்டு சென்ற காரை கொள்ளையன் ஒருவன் லாவகமாகக் களவாடிச் சென்றான்.

இச்சம்பவம் பெஸ்தாரி ஜெயா, பெக்கான் ஈஜோக்கில் உணவகம் ஒன்றின் எதிரே உள்ள நாசி லெமாக் அங்காடிக் கடையருகே நேற்று காலை 8.15 மணியளவில் நிகழ்ந்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் துணை சூப்பரின்டெண்டன்ட் முகமது அம்பியா நோர்டின் கூறினார்.

நாற்பத்தோரு வயதுடைய அந்த ஆடவர் புரேடுவா மைவி ரகக் காரை அந்த கடையில் இருந்து ஐந்து மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு உணவு வாங்கச் சென்றதாக அவர் சொன்னார்.

சிறிது நேரத்தில் பின்னோக்கி நகர்ந்த அந்த கார் ஈஜோக் நகருக்கு செல்லும் பிரதான சாலையை நோக்கி வேகமெடுத்ததை கண்டு அதன் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார் என முகமது அம்பியா பெர்னாமா தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த இடம் கடைகள் மற்றும் வீடுகள் அடங்கிய பகுதி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், அவ்வாடவரின் மனைவிக்கு சொந்தமான அக்காரை அவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தங்கள் வசம் வைத்திருந்தனர் என்றார்.

அந்த காரில் வீட்டின் சாவி மற்றும் கைப்பேசி ஆகியவையும் இருந்ததாக அந்த ஆடவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என்றார் அவர்.

அப்பகுதியில் இரகசிய கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) இருந்த போதிலும் அது சம்பவம் நிகழ்ந்த இடத்தை நோக்கும் வகையில் பொருத்தப்படவில்லை என்றார் அவர்.

 இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 379 ஏ பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.


Pengarang :