ANTARABANGSA

இக்குவாடோரில் 139 சிறைக்காவலர்கள், அதிகாரிகள் கைதிகளால் சிறைப்பிடிப்பு

குயிட்டோ, ஜன 11- இக்குவாடோர் நாட்டிலுள்ள்ள ஐந்து
சிறைச்சாலைகளில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வன்செயல் மற்றும்
கலவரங்களைத் தொடர்ந்து 125 சிறைக்காவலர்கள் மற்றும் 14 சிறை
நிர்வாக அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்துள்ளனர்.

அஸுவாய், கேனர், நாப்போ, துங்குருஹா மற்றும் கோட்டோபெக்ஸி,
ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளில் சிறைக்காவலர்களும்
அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம்
கூறியது.

சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க போலீசாரும் ஆயுதப் படைகளும்
தொடர்ந்து முயன்று வருகின்றனர் என அது தெரிவித்தது.

நாட்டின் தென்மேற்கு நகரான குவாய்குயில் சிறையிலிருந்து மிகப்பெரிய
போதைப் பொருள் கடத்தல்காரனும் குண்டர் கும்பல் தலைவனுமான
அடோல்போ ஃபித்தோ மஸியாசும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியதை
அதிகாரிகள் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில்
வன்செயல் மூண்டது.

சிறைச்சாலைகளில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தும்படி போலீசார்
மற்றும் ஆயுதப்படைகளுக்கு இக்குவாடோர் அதிபர் டேனியல் நோபாவோ
உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தங்கள்
கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நார்கோ பயங்கரவாதக்
கும்பல் கட்டவிழ்த்துள்ள வன்செயல்களுக்கு மத்தியில் நாட்டில்
பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கும் நோக்கில் நாடு
தழுவிய அளவிலான அவசரகால நிலையை அதிபர் கடந்த திங்கள்கிழமை
பிரகடனப்படுத்தியுள்ளார்.


Pengarang :