ACTIVITIES AND ADSECONOMY

ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 1,000 பேருக்கு பள்ளி உபகரணங்கள், பெருநாள்  பற்றுச்சீட்டு விநியோகம் 

ஷா ஆலம், ஜன 14- விரைவில் தொடங்கவிருக்கும் புதிய பள்ளித் தவணையை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் வட்டாரத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 800 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை ஸ்ரீ செர்டாங் தொகுதி வழங்குகிறது.

இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் நுழையவிருக்கும் 600 மாணவர்களுக்கு தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) திட்டத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் வேளையில் மேலும் 200 மாணவர்கள் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் வாயிலாக உதவிகளைப் பெறுவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.

மாணவர்களை பள்ளிக்குத் தயார் படுத்துவதில் குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த பெற்றோர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் மாநில அரசினால் அமல்படுத்தப்படும் இலக்கிடப்பட்ட உதவித் திட்டமாக இது விளங்குகிறது. இந்த உதவி கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெலாத்தி இகோ கார்டன் எனும் மினி பூங்காவை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு பள்ளித் தவணையை முன்னிட்டு புத்தகப் பை, எழுது பொருள்கள், உணவு கலங்கள் உள்ளிட்ட பொருள்களை வசதி குறைந்த மாணவர்களுக்கு யாவாஸ் வழங்குகிறது. இந்த பள்ளி நுழைவு உதவித் திட்டத்தின் கீழ் 36,326 தாவாஸ் உறுப்பினர்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதனிடையே, அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச்  சேர்ந்த 400 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள பெருநாள் கால பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.


Pengarang :