ECONOMYNATIONAL

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து வழித்தடங்களை மறு ஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவு

சுபாங் ஜெயா, ஜன 14- பொது போக்குவரத்து முறையின் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்  வழித்தடங்களை மறுஆய்வு செய்யும்படி ஊராட்சி மன்றங்களை மாநில அரசு பணித்துள்ளது.

டி.ஆர்.டி. எனப்படும் தேவை அடிப்படையிலான டிரான்சிட் வேன் சேவையுடன் இணைந்து ஆக்ககரமான முறையில் சேவையை வழங்குவதற்கு இந்த மறுஆய்வு அவசியமாவதாக பொது போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

டி.ஆர்.டி.யுடன் இணைந்த நடப்பு சேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ரிங்கிட் தொகையும் முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம். பஸ் மற்றும் டி.ஆர்.டி. சேவைக்கான பொருத்தமான தடங்களை ஊராட்சி மன்றங்கள் பரிந்துரைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு குறிப்பாக இலகு ரயில் சேவையை (எல்.ஆர்.டி.) பயன்படுத்துவோருக்கு பயன் தரும் வகையில் இவ்விரு சேவைகளும் அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பண்டார் கின்ராராவில் நடைபெற்ற மரம் நடும் இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஷா ஆலம் நகரில் டி.ஆர்.டி. வேன் சேவை விரிவு படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த டி.ஆர்.டி. சேவைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. பூச்சோங் வட்டாரத்தில் இந்த சேவையை நாங்கள் மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளோம். பயனாளிகளின் எண்ணிக்கையும் 800லிருந்து 1,500 பேராக அதிகரித்துள்ளது என்றார் அவர்.


Pengarang :