ECONOMY

இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி 100 நாள் நிறைவு- சாத்தியமற்ற நிலையில் போர் நிறுத்த முயற்சிகள்

கோலாலம்பூர், ஜன. 14-  கடந்தாண்டு  அக்டோபர் மாதம்  7ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்து இன்றுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில், முற்றுகையிடப்பட்ட பகுதியில் கணிசமான உயிரிழப்பு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் காஸா பகுதியில்  போர் நிறுத்தத்திற்கான எந்த சாத்தியமும் இல்லாத சூழல் நிலவுகிறது.

எனினும், மோசமான சூழலுக்கு மத்தியிலும்  சம்பந்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை  தொடர்வதால் நிலையான போர்நிறுத்தத்தை அடைய முடியும் என்று ஆய்வாளர் டாக்டர் அகமது பத்ரி அப்துல்லா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிப்பது, போர் நிறுத்தம் தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளது, போர் நிறுத்தத்திற்கு அனைத்துலக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் இஸ்ரேலின் படையெடுப்பிற்கு வழங்கிய ஆதரவை  அமெரிக்கா  குறைப்பது உள்ளிட்ட சில காரணங்கள் போர் நிறுத்தத்திற்கான  நம்பிக்கைக்கு பங்களிக்கின்றன என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய ஆய்வியல் கழகத்தின் (ஐ.ஏ.ஐ.எஸ்.)  துணைத் தலைமை நிர்வாக அதிகாரியான அவர் கூறினார்.

தற்போது காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு பெரிய அளவில் சர்வதேச முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய  அகமது பத்ரி, காஸாவில் மேற்கொள்ளப்படும்  இராணுவ நடவடிக்கைகள்  1948ஆம் ஆண்டு இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்கு  ஒப்பாகும் எனக் குற்றஞ்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தில்  இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எதிராக விண்ணப்பம் செய்துள்ளதையும் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனர்கள், குறிப்பாக குழந்தைகளின் படுகொலை , வீடுகளை அழித்தல், கட்டாய வெளியேற்றம், இடம்பெயர்தல் மற்றும் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய ஆதாரங்களுக்குத்  தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிய தென்னாப்பிரிக்கா, இவை யாவும் இனப்படுகொலை ஒப்பந்தத்தின் மீறல்கள் எனச் சுட்டிக்காட்டியது.

இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பாலஸ்தீனர்களைக் கொல்வதை நிறுத்தி கட்டாய இடப்பெயர்வைத் தடுக்க வேண்டும். போதுமான உணவு, தண்ணீர், எரிபொருள், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நாடு இடைக்கால நடவடிக்கைகளைக் கோரியுள்ளது  என்று அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் வழக்கிற்கு மலேசியா தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வழக்கின் முதல் விசாரணை ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தி ஹேக்கில் நடைபெற்றது.


Pengarang :