MEDIA STATEMENTNATIONAL

வெ.20 லட்சம் மின் கட்டணப் பாக்கி- அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் போலீசில் புகார்

ஷா ஆலம், ஜன 15- மின் கட்டணப் பாக்கி 20 லட்சம் வெள்ளியை எட்டியது தொடர்பில் பண்டார் தாசேக் செலாத்தான் மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் சிலர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில்  பண்டார் தாசேக் செலாத்தான் 1 அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத்திற்கு (ஜே.எம்.டி.) எதிராக 17 பேரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

அந்த குடியிருப்பிலுள்ள ‘ஏ‘ முதல் ‘இ‘ வரையிலான ஐந்து புளோக்குகளிலும் மின் விநியோகத்தை துண்டிக்கப்போவதாக  தெனாகா நேஷனல் நிறுவனம் எச்சரிக்கை கடிதம் வழங்கியதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இதன் தொடர்பான முதல் புகாரை தாங்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வளவு பெரிய தொகை நிலுவையில் இருப்பதற்கு கூட்டு நிர்வாக மன்றத்தின் தலைவர் நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் இப்புகாரைச் செய்துள்ளனர் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பில் கட்டிட ஆணையத்திடம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர் நடவடிக்கை எடுக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் விளக்கினார்.

இந்த பிரச்சனை கட்டிட ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்தால் இப்புகாரை பிற துறைகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வழக்காக தாங்கள் வகைப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :