MEDIA STATEMENTNATIONAL

தடைகள் விலகட்டும் வாய்ப்புகள் பெருகட்டும் – டத்தோ ரமணன் பொங்கல் வாழ்த்து

ஷா ஆலம், ஜன 15- அறுவடை நாளாம் தமிழர் திருநாளாக அனுசரிக்கப்படுகின்ற இந்நன்னாளில், மங்களம் உண்டாக்கும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்ற மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதியார் பாடியதை ஆராய்கையில், தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தகைய முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரமுடிகின்றது.

சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கை வளம் என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன சிறப்பம்சங்களோடு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியன உருவாக உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்ற இந்தப் பொங்கல் நன்னாளில், மலேசிய இந்தியர்களின் நிலைகள் உயர வேண்டி வாழ்த்துச் செய்தி வழங்குவதில் தானும் மகிழ்ச்சிக் கொள்வதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் மிக உறுதியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை கைக்கூடும் வகையில் மலர்ந்திருக்கும் இந்த தைத்திருநாளில் தடைகள் விலகட்டும், வாய்ப்புகள் பெருகட்டும், வாழ்க்கை நிலைகள் உயரட்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


Pengarang :