ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோஹான் செத்தியாவிலுள்ள காய்கறித் தோட்டங்கள் அந்நியர்கள் வசமா? அபத்தமான குற்றச்சாட்டு என்கிறார் மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 16- கிள்ளானில் விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் அந்நிய நாட்டினருக்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வன்மையாக மறுத்துள்ளார்.

ஜோஹான் செத்தியாவில் காய்கறிகளைப் பயிரிடுவதற்கு அந்நிய நாட்டினர் நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்துரைத்த அவர், அந்த செய்தி வெறும் ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

அங்கு அந்நிய நாட்டினரின் வருகை அல்லது ஊடுருவல் இருக்கலாம். ஆனால் எந்த வெளிநாட்டினரும் அங்கு நில உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நேற்று மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரசு ஊழியர்களுடனான சந்திப்பு நிகழ்வில் சிறப்புரையாற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

 அப்பகுதியில் காய்கறி பயிரீட்டு நடவடிக்கையில் அந்நிய நாட்டினரின் ஈடுபாடு நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனையாகும். இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆயினும் அங்குள்ள நிலங்கள் ஒருபோதும் அந்நிய பிரஜைகளுக்கு சொந்தமானதில்லை என்று அவர் சொன்னார்.

அந்த நிலங்கள் யாவும் உள்நாட்டினருக்குச் சொந்தமானவையாகும். ஒருவேளை அந்த நிலங்களில் பயிர் செய்வதற்கு அந்நியர்களை அவர்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கக் கூடும் என்றார் அவர்.

‘காய்கறிகளைப் பயிரிடுவதற்காக அந்நிய நாட்டினர் தற்போது ஜோஹான் செத்தியா பகுதியில் ஊடுருவியுள்ளதாக உத்துவான் மலேசிய நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

 மொத்தம் 2,585.4 ஹெக்டர் பரப்பளவிலான அந்த நிலம் ஆயிரக்கணக்கான டன் காய்கறிகளை உற்பத்தி  செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கிற்குத் தேவையான காய்கறித் தேவையில் 20 முதல் 30 விழுக்காட்டை ஜோஹான் செத்தியாவிலுள் காய்கறித் தோட்டங்கள் நிறைவு செய்வதாக கூறிய அமிருடின், கேமரன் மலைக்கு அடுத்து காய்கறிகளை அதிகம் பயிடும் பகுதியாக இது விளங்குகிறது என்றார்.


Pengarang :