MEDIA STATEMENTNATIONAL

லஞ்சப் புகாரில் ஊராட்சி மன்ற முன்னாள் அமலாக்க அதிகாரிகள் இருவர் கைது

கோலாலம்பூர், ஜன 16- சுமார் 18,000 வெள்ளியை கையூட்டாகப் கேட்டுப் பெற்ற சந்தேகத்தின் பேரில் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள் இருவரை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

தங்களை புக்கிட் அமான் உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட 30 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்காக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து கையூட்டு பெற்றதாக வட்டாரங்கள் கூறின.

முதலாவது சந்தேகப்பேர்வழி நேற்று மாலை 5.10 மணியளவில் தலைநகரில் கைது செய்யப்பட்ட வேளையில் இரண்டாவது நபர் வாக்குமூலம் அளிப்பதற்காக தலைநகரில் உள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு நேற்றிரவு 8.57 மணியளவில் வந்த போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோலாலம்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட நபரின் அலுவலகத்திற்கு வந்த சந்தேகப் பேர்வழிகள் “சட்டவிரோதப் பணபரிவர்த்தனைக் சட்டத்தின் கீழ் உங்களுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. வழக்கு பதிவு செய்துள்ளது“ எனக் கூறியுள்ளனர்.

மறு நாள் அதே அலுவலகத்திற்கு வந்த அவ்வாடவர்கள் இந்த வழக்கை மூடி மறைப்பதற்கு 18,000 வெள்ளியை லஞ்சமாகத் தர வேண்டும் என கோரியுள்ளனர்.

பயத்திற்குள்ளான அந்த பாதிக்கப்பட்ட நபர் முதல் கட்டமாக பத்தாயிரம் வெள்ளி ரொக்கத்தை சந்தேகப்பேர்வழிகளிடம் ஒப்படைத்ததோடு எஞ்சிய 8,000 வெள்ளியை திங்கள்கிழமை (ஜனவரி 15) கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். அவ்வாடவர் உடனடியாக இவ்விவகாரம்  தொடர்பில் எம்.ஏ.சி.சி.யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, இந்த புகார் தொடர்பில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ முகமது பவுஸி ஹூசேன்,  2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(ஏ)(ஏ) பிரிவின் கீழ் அவ்விருவரையும் விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதி இன்று பெறப்படும் என்றார்.


Pengarang :