ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிலையான தவணைக்கால  நாடாளுமன்றச் சட்டம் தொடர்பில் கருத்திணக்கம் காணப்படவில்லை- அன்வார்

செர்டாங், ஜன. 16 – நிலையான தவணைக்கால நாடாளுமன்றச் சட்டத்தை இயற்றுவது தொடர்பில் இதுவரை ஒற்றுமை  அரசுத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அத்தகையச் சட்டத்தை  இயற்றுவது அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை இல்லை என்று நிதியமைச்சருமான  அவர் கூறினார்.

அத்தகைய விவாதத்தை நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், இது குறித்து முடிவு செய்வதற்கு இன்னும் தருணம் வரவில்லை. ஏ.ஜி.யிடமிருந்து (சட்டத் துறைத் தலைவர்)  எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இன்று இங்குள்ள யுனிவர்சிட்டி புத்ரா மலேசியாவில் மக்களுக்கான ஏ.ஐ. எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

நிலையான கால நாடாளுமன்ற தவணைக்காலம் தொடர்பில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அன்வார் இவ்வாறு சொன்னார்.

இந்த நிலையான தவணைக்கால சட்ட அமலாக்கம் மூலம்  பதவிக்காலம் முடியும் வரை அல்லது அடுத்த பொதுத் தேர்தல்  வரை நடப்பு அரசாங்கத்தின் ஆட்சி நீடிக்கும் என ஜாஹிட் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அன்வார், அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  முயற்சிகளை மேற்கொள்வதே இப்போதுள்ள பிரச்சினை என்றார்.

அவர்கள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் கூட இல்லை. எனவே நாம் ஏன் இதை  விவகாரமாக்க  வேண்டும்? என்றார் அவர்.


Pengarang :